கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தில் காலதாமதம், நீதிமன்றம் அவமதிப்பு தொடர போவதாக விவசாயிகள் அறிவிப்பு ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து தொடங்கும் கீழ் பவானி பாசன வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் ரூ.720 கோடி மதிப்பீட்டில் வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து இந்த திட்டத்திற்கு ஒரு தரப்பு பாசன வாய்க்கால் விவசாயிகள் எதிர்ப்பும், மற்றொரு தரப்பு விவசாயிகள் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் எனவும் அரசைப் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், திட்டத்தைச் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும் இந்த திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகள் போராட்டம் காரணமாக, இத்திட்டம் செயல்படுத்த முடியாத சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பு விவசாயிகள் மத்தியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் முத்துச்சாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தக்கோரி, ஈரோடு மாவட்ட நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பொன்னையன், "கான்கிரீட் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் செயற்பொறியாளர் நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா முறையாக அனைத்து விவசாயிகளையும் அழைத்துப் பேசாமல், ஒரு தரப்பு விவசாயிகளை மட்டும் அழைத்து பேசி செய்தியை வெளியிட்டுள்ளார்.
இதனால் கீழ் பவானி சீரமைப்பு பணிகளை விரைந்து தொடங்கவும், மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி எண் 75யை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், கீழ் பவானி சீரமைப்பு பணிகள் தொடங்கவில்லை என்றால் அமைச்சர் முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சிறைபிடிப்பு..பொதுமக்கள் சாலைமறியல்