ஈரோடு: ஆகஸ்ட் முதல் வாரத்தில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் தற்போது வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் கான்கிரீட் கரையை பலப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம் கீழ்பவானி வாய்க்கால் வழியாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து ஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை என இரண்டாகப் பிரித்து ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை
தற்போது கீழ்பவானி பிரதான வாய்க்காலில் கரைகளை பலப்படுத்துதல், கிளை வாய்க்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தற்போதைய நிலவரப்படி 95.61 அடியாக உள்ளது.
105 அடி உயரமுள்ள அணையில் 95 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீழ்பவானி வாய்க்காலில் பவானிசாகர் முதல் கரூர் மாவட்டம் வரை உள்ள வாய்க்காலில் பல்வேறு இடங்களில் கரை பலப்படுத்துதல் மற்றும் கிளை வாய்க்கால்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருகின்றன.
பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
கடந்த ஆண்டு தொடர் மழையின் காரணமாக ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே ஆகஸ்ட் 1ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதுபோல் இந்த ஆண்டும் முன்கூட்டியே தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் கரையை பலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கீழ்பவானி பாசனப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆடி 1: அந்தியூர் கால்நடை சந்தையில் ஒரு கோடிக்கு வியாபாரம்!