ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்களுக்கு இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்குமாறு கொடிவேரி பாசன விவசாயிகள் கோரிகை வைத்திருந்தனர்.
அதனை ஏற்று முதலமைச்சர் 01.02.2020 முதல் 31.05.2020 வரை இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.
அதையடுத்து கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்களுக்கு பொதுப்பணித்துறை அலுவலர்கள், கொடிவேரி பாசன விவசாயிகள் தண்ணீரைத் திறந்துவைத்து மலர் தூவி வணங்கினர்.
தொடர்ந்து 120 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீரால் கோபிசெட்டிபாளையம் பவானி, அந்தியூர் ஆகிய மூன்று தாலுக்காக்களில் உள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதியும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் மறைமுக பாசன வசதியும் பெற்று பயனடைகின்றது.
முதல்போக சாகுபடிக்கு பருவம் தவறி தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் நட்டத்தை அடைந்ததாகவும் வரும் காலத்தில் முதல் போக சாகுபடிக்கு சித்திரை ஒன்றாம் தேதி தண்ணீர் திறக்கவேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் போக சாகுபடிக்கு கொடிவேரி தடுப்பணையிலிருந்து தண்ணீர் திறப்பு! நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவேண்டும் எனவும் பவானிசாகர் அணையிலிருந்து பவானி கூடுதுறை வரையுள்ள பவானி ஆற்றில் நடைபெறும் நீர் திருட்டை தமிழ்நாடு அரசு தடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கொடிவேரி பாசன விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்க: அறுவடைக்காக அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி