ஈரோடு: சத்தியமங்கலத்தில் உள்ள துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் வனத்துறை ஆகிய இரு துறைகளும் இணைந்து குழுக்கள் அமைத்து, குற்றங்கள் தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் இன்று (டிச.12) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநர் சுதாகர் மற்றும் காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு எஸ்.பி ஜவஹர், “உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி, அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடுவதைத் தடுத்தல், வன குற்றங்களைத் தடுத்தல், மாவோயிஸ்ட் நடமாட்டத்தைக் கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் இணைந்து குழுக்கள் ஏற்படுத்துவது குறித்து இன்று (டிச.12) ஆலோசிக்கப்பட்டது.
இதன்படி வனச்சரக அலுவலர், வனவர், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்கள் அமைத்து, ரோந்துப்பணி மேற்கொண்டு வனக் குற்றங்களைத் தடுப்பது, குற்ற நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சந்தேகப்படும் படி நபர்கள் இருந்தால் அவர்களைப் பிடித்து விசாரித்து, நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.