'சிலம்பத்தில் தூள் கிளப்பிய மக்கள்' - ஈரோட்டில் கோலாகல கொண்டாட்டம் ஈரோடு: இன்றைய நவீன காலத்தின் தாக்கத்தினாலும், நமது பொழுதுபோக்கிற்கான இடத்தை ஆக்கிரமித்த மொபைல்கள் அதில் உள்ள கேம்களினாலும் நாம் மறந்த கலைகள் ஏராளம். அந்த வகையில், அவற்றை மீட்டு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார், காமராஜ்.
ஈரோடு மாவட்டம், ராசாம்பாளையம் எஸ்.எஸ்.பி.நகர் பகுதியைச் சேர்ந்தவர், காமராஜ். இவர், விசைத்தறிக்கு பாவு செய்யும் தொழில் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், அழியும் தருவாயில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், வாள்வீச்சு உள்ளிட்ட கலைகளை இவர் மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறார்.
இவரிடம் தினமும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள், பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர்கள் முதல் சிலம்பம் உள்ளிட்டப் பல்வேறு கலைகளை பயின்று வருகின்றனர். இந்த சிலம்பாட்டக்குழுவின் சார்பில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் 'பொங்கல்' (Pongal Festival) பண்டிகையின்போது, பொங்கல் வைத்து கொண்டாடப்படுவது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக கரோனா நோய்த்தொற்றின் காரணமாக, பொங்கல் பண்டிகை கொண்டாடாமல் இருந்து வந்த சிலம்பாட்டக்குழுவினர் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை இன்று (ஜன.15) உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சிலம்பாட்டப் பயிற்சி மையத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் இணைந்து உற்சாகமாக பொங்கல் வைத்து தைத்திருநாளை கொண்டாடினர்.
பின்னர் சிலம்பாட்டம், உறியடி, சுருள்வாள் வீச்சு, கத்தி சண்டை, தடி வரிசை, அடிமுறை உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை செய்து காட்டினர். ஆண்களுக்கு இணையாக பெண்களும் லாவகமாக இந்தப் பயிற்சிகளை செய்து காட்டினர். அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என இந்த நிகழ்வின் மூலம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் சென்னை, பெங்களூரு என பணிக்காக பல்வேறு ஊர்களில் வசித்து வந்தபோதிலும் ஆண்டிற்கு ஒரு முறை ஒன்று கூடி பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சியை அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகி வருவதாகவும்; அதனைத் தடுக்க பெண்கள் அனைவரும் தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: Pongal celebrations: 65 ஆண்டுகள் கடந்தும் சமத்துவப் பொங்கல்!