தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 25 சவரன் கொள்ளை! - masked robbers

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 25 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

துரைராஜ் வீடு

By

Published : Jun 18, 2019, 10:07 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர் தனியார் மருத்துவமனை ஊழியராக பணியாற்றிவருகிறார். நேற்றிரவு துரைராஜ் மளிகைக் கடைக்கு சென்றுவிட்ட நிலையில், அவரின் மனைவி சாந்தி, மகள் கிருத்திகா, மாமியார் பழனியம்மாள், உறவினர் மகள் அபிராமி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.

துரைராஜின் வீட்டை நீண்ட நாள் நோட்டமிட்டிருந்த முகமூடி கொள்ளையர்கள், அவர் வீட்டில் இல்லாததை தெரிந்துகொண்டு வீட்டிற்குள் புகுந்து நான்கு பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகைகளை கழற்றி தருமாறு மிரட்டியுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட துரைராஜின் வீடு

இதனால் பயந்துபோன பெண்கள் நான்கு பேரும் தங்களது கழுத்தில் இருந்த பத்து சவரன் தங்க நகையை கழற்றி கொடுத்துள்ளனர். இதன் பின்னர் வீட்டிற்குள் இருந்த பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். மொத்தம் 25 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்கள் துரைராஜ் வீட்டின் பின்பக்க கதவு வழியாக தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவுந்தப்பாடி காவல் துறையினர் நகையை பறிகொடுத்த நான்கு பெண்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

முகமூடி கொள்ளையர்கள் அனைவரும் 30 வயதிற்குள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், துரைராஜ் மகள் கிருத்திகாவின் திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், திருமணத்திற்காக நகை வைத்திருப்பதை தெரிந்தவர்களே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் கொள்ளையர்களை பிடிப்பதற்காக ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details