ஈரோடு மாவட்டம் காசிபாளையம் காந்திநகர் பகுதியில் பெருமாள் மற்றும் அவரது சகோதரர் சண்முகம் ஆகியோருக்கு சொந்தமான பூர்வீக பூமி 40 செண்ட் இடம் உள்ளது. இந்த இடத்திற்கு ஐந்து பேர் பங்குதாரராக இருக்கும் பட்சத்தில் சண்முகம் என்பவர் யாருக்கும் தெரியாமல் வள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த வஞ்சிதுரைக்கு 40 செண்ட் இடத்தை விற்றுள்ளார். இந்த சம்பவம் மற்ற நான்கு பேருக்கு தெரிய வர இடத்தகராறு கோர்ட் வரை சென்றது.
இவ்வழக்கு கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும்நிலையில் இடத்தை வாங்கிய வஞ்சிதுரை அடிக்கடி அடியாட்களுடன் வந்து பெருமாள் -செல்வி தம்பதியினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சூழலில், மூன்று கார்களில் 20 க்கும் மேற்பட்ட அடியாட்களை அழைத்து வந்த வஞ்சிதுரை, வாங்கிய இடத்தை ஒப்படைக்கக் கோரி பெருமாள் மற்றும் அவரது மகன்கள் தர்மராஜ், விஜயகுமார் ஆகியோரை சரமாரியாக தாக்கினார்.