ஈரோடு: கடம்பூர் அருகே பகலில் ஊருக்குள் புகுந்த கட்டையன் யானைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறையினர் தெங்குமரஹாடா தலமலை காப்புக்காட்டில் விட்டனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்து உள்ள கடம்பூர் மலைப் பகுதியில் உள்ள கடம்பூர், அத்தியூர், பவளக்குட்டை, ஏலஞ்சி, நடூர் செங்காடு உள்ளிட்டப் பல்வேறு கிராமங்களில் பகல் நேரங்களில் ஒற்றை காட்டு யானை புகுந்து, அங்கு சாகுபடி செய்த வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தி வந்தது.
இதனால் வேதனை அடைந்த கிராம மக்கள், தினம்தோறும் பயிர்களைச் சேதப்படுத்தி வந்த யானையைப் பிடிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த யானைக்கு வனத்துறையினர் ‘கட்டையன்’ என பெயர் வைத்திருந்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் யானையைப் பிடிப்பதற்காக அரசிடம் உரிய அனுமதி பெற்றனர். இதை அடுத்து யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவர்கள் விஜயபிரகாஷ், சதாசிவம் ஆகியோர் கடம்பூரில் முகாமிட்டனர்.
மேலும், பிடிபட்ட யானையை ஏற்றுவதற்கு ஓசூர் வனக்கோட்டத்தில் இருந்து பிரத்யேக ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் கடம்பூர் மலைப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. கட்டையன் யானையை பிடிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அடங்கிய குழுவினர் பவளக்குட்டை கிராமத்தில் முகாமிட்டதோடு, ரோந்து வாகனங்களில் சென்று 10 மணி நேரமாக கட்டையன் யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.