ஈரோடு சூளை ஈபிபி நகர் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் சொந்தமாக கார்மென்ட்ஸ் ஒன்றை நடத்திவருகிறார். இவர் கடந்த 18ஆம் தேதி மொடக்குறிச்சியில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார்.
இதைத்தொடர்ந்து இளங்கோவின் மாமியார் சரஸ்வதி கடந்த 20ஆம் தேதி இளங்கோவின் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, இளங்கோவிற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், இளங்கோ அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து ஆறு சவரன் நகை, பல ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வீரப்பன் சத்திரம் காவல் நிலையத்தில் இளங்கோ புகார் அளித்தார்.
அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிப் பதிவுகளை கொண்டு விசாரனை மேற்கொண்டனர். அதில், இரண்டு இருசக்கர வாகனங்களில் நான்கு பேர் வந்து இளங்கோ வீட்டின் பூட்டை உடைத்து திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.