தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் கணேசமூர்த்தி வெற்றி! - வெற்றி

ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட மணிமாறனை விட இரண்டு லட்சத்து ஆயிரத்து 268 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

அ.கணேசமூர்த்தி

By

Published : May 23, 2019, 4:35 PM IST

இந்தியாவில் 17ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இந்திய அளவில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்தாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியே 35 இடங்களுக்கும் மேல் முன்னிலை வகித்துவருகிறது.

இந்நிலையில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்துவந்தார். தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவில் அ,கணேசமூர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இவரது வெற்றியை மதிமுகவினர், திமுகவினர் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடிவருகின்றனர். அ.கணேசமூர்த்தி ஐந்து லட்சத்து 44 ஆயிரத்து 980 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மணிமாறன் (53) மூன்று லட்சத்து 43 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

யார் இந்த கணேசமூர்த்தி?

ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் கிராமத்தில் அவினாசிகவுண்டர், சாரதாம்மாள் தம்பதிக்கு 1947 ஜூன் 10ஆம் தேதி மகனாக பிறந்தார் கணேசமூர்த்தி. பி.ஏ. பொருளியல் படித்த இவர், சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல். முடித்துள்ளார். கணேசமூர்த்திக்கு பாலாமணி என்ற மனைவியும் கபிலன் என்ற மகனும் தமிழ்பிரியா என்ற மகளும் உள்ளனர்.

இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட கணேசமூர்த்திக்கு 1984ஆம் ஆண்டு முதல்முறையாக திமுகவின் மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வைகோ மதிமுகவை தொடங்கியது முதல் 1993ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்ட மதிமுக செயலாளராகவும், கட்சியின் மாநில பொருளாளராகவும் கணேசமூர்த்தி பதவி வகித்துவருகிறார்.

மக்கள் பிரதிநிதியாய் கணேசமூர்த்தி

1998ஆம் ஆண்டு பழனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட கணேசமூர்த்தி, ஈரோடு மக்களவைத் தொகுதியில் 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

ஆனால், கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். இந்நிலையில், மீண்டும் மக்கள் பிரதிநிதியாய் கணேசமூர்த்தி நாடாளுமன்றம் செல்லவிருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details