மீன்வளத்துறை அதிகாரி அருள்ராஜ் கைது செய்யப்பட்ட காட்சி ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் செரையாம்பாளையத்தில பவானி ஆற்றங்கரை பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன் பண்ணை அமைத்து உள்ளார். மீன் பண்ணை அமைப்பதற்கு தமிழக மீன்வளத்துறை 2.80 லட்சம் ரூபாய் மானியம் வழங்கி வருகிறது. கார்த்திக் மீன் பண்ணை அமைத்ததும் முதல் கட்ட மானியத் தொகை 1.60 லட்சம் ரூபாயை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அவரது வங்கி கணக்கிற்கு மீன்வளத்துறை மூலம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மீதமுள்ள மானியத்தொகை 1.20 லட்சம் ரூபாயை கடந்த 19-ஆம் தேதி மீன்வளத்துறை வழங்கியது. இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி கார்த்திக்கை தொடர்பு கொண்ட கோபி மீன்வளத்துறை ஆய்வாளர் பவானிசாகரை சேர்ந்த அருள்ராஜ் (வயது 47) என்பவர், இரண்டு நாட்களில் மானியத்தொகை 1.20 லட்சம் வழங்கப்படும் என்றும், அதற்கு 31 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக், இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயண பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கார்த்திக்கிடம் கொடுத்து அனுப்பினர். கார்த்திக், மீன்வளத்துறை ஆய்வாளர் அருள்ராஜை தொடர்பு கொண்ட போது, ஓடத்துறை குளத்திற்கு வருமாறு கூறி உள்ளார்.
கார்த்திக்கும், லஞ்ச பணத்துடன் ஓடத்துறை குளம் சென்ற போது அங்கு வந்த ஆய்வாளர் அருள்ராஜ், கார்த்திக்கிடம் லஞ்ச பணத்தை பெற்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி.,ராஜேஷ் தலைமையில் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், அருள்ராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:‘போலியான ஆடியோ, வீடியோ வெளியிடுவதில் பாஜகவினர் கைதேர்ந்தவர்கள்’ - ரவிக்குமார் எம்.பி.