ஈரோடு திம்பம் மலைப்பாததையில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் அந்த மலைப்பாதை பகுதியில் பல்வேறு இடங்களில் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதை வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக திம்பம் மலைப்பாதை பகுதியில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. மைசூரிலிருந்து கோவை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி ஆசனூர் அருகே சாரல் மழை காரணமாக சாலை வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக கார் சென்று கொண்டிருந்தது. சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால் 7வது கொண்டை ஊசி வளைவு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பாதை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் சென்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.