கரோனா வைரஸ் நிவாரண உதவியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தினர் அளித்த அத்தியாவசிய பொருள்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கதிரவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”ஈரோடு மாவட்டத்தில் கடந்த 22 நாள்களாக நோய் பாதிப்பு அறிகுறிகள் அற்ற நிலை நீடித்துவருகிறது. ஈரோட்டினை நோயற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
நோய் பாதிப்பு வெகுவாக குறைந்ததற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கியமானதாக இருந்தது. மாவட்டத்தில் இதுவரை 15க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கும் விரைவில் தளர்வுகள் அளிக்கப்படும். தற்போது கூட்டம் அதிகம் சேராத தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டுள்ள நகைக்கடை, ஜவுளிக்கடை ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அவற்றிற்கு அனுமதி அளித்தால் இதுவரை மேற்கொண்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் பயனற்றதாய் போய்விடும் .