தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானிசாகர் அணையில் இரவில் மணல் திருட்டு!

ஈரோடு: பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் உள்ள ஆற்று மணலை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் திருடிச் சென்று விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

dam

By

Published : Jun 12, 2019, 2:13 PM IST

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் உள்ள பவானி ஆற்றுப்படுகையில் அதிக அளவில் மணல் படிந்துள்ளது. இந்த நிலையில் நீர்த்தேக்கப்பகுதி உள்ள சித்தன்குட்டை, ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மணல் திருட்டில் ஈடுபடுவதாகவும், ஆற்றங்கரையில் படிந்துள்ள மணலை இரவு நேரத்தில் குவியல் குவியலாக குவித்து வைத்து, பின்னர் மணல் ஈரம் காய்ந்த பின் டிராக்டர்களில் கடத்திக் கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

மணல் திருட்டு

கடத்தி செல்லப்படும் மணலை புஞ்சைபுளியம்பட்டி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் ஒரு லோடு ரூபாய் ஐந்தாயிரம் முதல் எட்டாயிரம் வரை விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

தினமும் நடைபெறும் இந்த மணல் திருட்டால் பவானி ஆற்றங்கரையில் படிந்துள்ள மணல் பெருமளவில் கடத்தப்படுகிறது. பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, உள்ளூர் காவல் துறையினர் மணல் திருட்டை கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் பவானி ஆற்றங்கரையில் இரவில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், இப்பகுதியில் சட்டவிரோதமாக திருட்டு மீன்பிடிப்பும் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details