”உலக யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. யானைகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
யானைகள் தினமானது முதன்முதலில் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் நாள் கொண்டாடப்பட்டது. அதாவது, வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்த 'வனத்திற்குள் திரும்பு' என்ற படம் வெளியான நாளை தான் யானைகள் தினமாகக் கொண்டாடுகின்றனர்.
யானைகளின்றி நாம் இல்லை
யானைகளின் வழித்தடத்தை மனிதர்கள் விவசாய நிலங்களாக மாற்றி மின்வேலி அமைப்பதால், அதில் யானைகள் கொல்லப்படுகின்றன.
தற்போது காட்டுப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தொழிற்சாலைகளாகவும் நெடுஞ்சாலைகளாகவும் மாற்றப்பட்டு வருவதனால் யானைகளின் பாதைகள் மாறிவிட்டன.
ஆனால் யானைகள் அதே பாதையில் தான் பயணித்து வருகின்றன, பலியாகவும் செய்கின்றன. காடுகளும், யானைகளும் இல்லாமல் மக்களும், பிற உயிர்களும் நல்ல காற்றை சுவாசிக்க முடியாது என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.
யானைகள் இன்றி காடுகள் இல்லை யானையின் பழக்கம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில், யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் யானைகள் மேய்ச்சல் நிலங்களாக உள்ளன.
யானைகளின் முக்கிய வழித்தடமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தின் குத்தியாலத்தூர் காப்புக்காடு உள்ளது. எதிர்காலத்தில் யானைகள் இல்லையெனில் காடுகள் பேரழிவை சந்திக்கும். ஒரு யானையை இழப்பது என்பது ஒரு காட்டை இழப்பதற்கு சமம்.
யானை வழக்கமாக தினந்தோறும் 200 முதல் 250 கிலோ அளவு உணவை உட்கொள்ளும். அதுமட்டுமின்றி நாளொன்றுக்கு 100 முதல் 150 லிட்டர் வரை தண்ணீர் அருந்தும். யானை உட்கொள்ளும் 200 முதல் 250 கிலோ உணவில் 10 விழுக்காடு விதைகளும், குச்சிகளும் இருக்கும். 10 விழுக்காடு என்பது 20 முதல் 25 கிலோ விதைகள், குச்சிகளாகும்.
சாணத்தின் முக்கியத்துவம்
இவை யானைகளின் சாணம் மூலம் மீண்டும் மண்ணில் விதைக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் மரங்கள், காடுகள் உருவாகின்றன. அந்த வகையில் யானைகள் தங்களது வாழ்நாளில் 18 லட்சம் மரங்களை உருவாக்குகின்றன.
இத்தகையயானைகளைஅரசாங்கம், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் இணைந்து முயற்சித்தால் மட்டுமே பேணிக் காக்க முடியும். இதனை மக்கள் அறிவியல்பூர்வமாக உணர்ந்து செயல்பட வேண்டும்.
யானைகள் குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது” என சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அரசு கால்நடை மருத்துவர் அசோகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: யானைகள் ஆசீர்வாதத்தில் மருத்துவ குணங்கள்- கம்பீர தோற்றத்தில் இருக்கும் சிறப்புகள்