கடம்பூரில் அறுவடைக்குத் தயாராக இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளக் கதிர்களை யானைகள் தின்றும், மிதித்தும் நாசப்படுத்துவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில், மானாவாரிப் பயிரான மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மாதம் பெய்த மழையால், 3 மாதப் பயிரான மக்காச்சோளம், தற்போது நன்கு செழித்து வளர்ந்து, கதிர் விட்டு அறுவடைக்குத் தயாராக இருந்தது.
இந்த நிலையில் கடம்பூர், ஏரியூர், செங்காடு ஆகிய பகுதிகளில் சில நாட்களாக காட்டு யானை மக்காச்சோளக் காட்டுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதையடுத்து, இன்று அதிகாலை ஏரியூர் கிராமத்தில் புகுந்த காட்டு யானைகள், அங்குள்ள ரமேஷ், சித்தன், சுப்பிரமணி, ராமசாமி, தங்கராஜ் ஆகியோரது தோட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த மக்காச்சோளக் கதிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை உற்பத்திச் செலவு ஆன நிலையில், தற்போது யானைகள் அந்த மக்காச்சோளப் பயிர்களை சேதப்படுத்தியதால், விவசாயிகள் 1 லட்சம் வரை வருவாய் இழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் யானைகள் மட்டுமின்றி, காட்டுப்பன்றிகளும் செடிகளை கடித்து தின்று, நாசப்படுத்தி வருவதாக கூறுகின்றனர்.
நாள்தோறும் யானைகள் அதிகாலை நேரம் அட்டகாசம் செய்வதால், இரவு முழுவதும் காவலுக்கு இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், இதனால் வேறு விவசாயப் பணிகள் செய்ய முடியவில்லை எனவும் விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். யானையால் பயிர்சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகாதபடி வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்! காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு!