ஈரோடு: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று(பிப்ரவரி 28) வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காவல்துறையினர், வருவாய்த்துறையினர், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சத்தியமங்கலம் மலை கிராமங்களில் வாழும் பழங்குடி மக்களை, வாக்குப்பதிவிற்காக கட்சிகள் தங்களது சொந்த வாகனத்தில் அழைத்துவரக்கூடாது. அவர்கள், சுதந்திரமாக வாக்களிக்க வரவேண்டும். பழங்குடியின வாக்காளர்கள் வாக்களிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்துகொடுக்கும்.
தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச் செல்பவர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்துச் சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும். பேனர் வைப்பது, பொதுக்கூட்டம் நடத்துவது, பரப்புரை மேற்கொள்வது போன்ற அனைத்தும் விதிகளுக்கு உட்பட்டு நடத்தவேண்டும். பொதுக்கூட்டத்தின்போது, கட்சியினருக்கு கொடுக்கப்படும் சாப்பாட்டுச் செலவு போன்றவையும் தேர்தல் செலவுகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. பவானிசாகர் தொகுதி இரு மாநில எல்லையில் அமைந்துள்ளதால் மதுபானங்கள் கடத்துவதைத் தடுக்க காவலர்கள் மிகுந்த கவனத்துடன் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க:ஐபேக் இளைஞர் படையுடன் தேர்தல் களம் காணும் திமுக