ஈரோடு:நீர் நிலைகள் இருக்கும் இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் ஆலைகள் இருக்க கூடாது என்ற நீதிமன்ற உத்தரவையும், விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி அனுமதி அளித்தால் விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முடிவெடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு ‘இன்பரோடெக்ஸ்’ என்ற ஆயத்த ஆடை தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்குச் சொந்தமாக பெருந்துறை சிப்காட் துளப்பேட்டை வளாகம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அருகே 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 35 ஏக்கர் நிலப்பரப்பில் மேலும் ஒரு தொழிற்சாலையை இந்த இன்ப்ராக்ட் நிறுவனம் அமைக்க முடிவு செய்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் கொடிவேரி அணையில் இருந்து பாசனம் பெற்று வரும் தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பாசனம், காளிங்கராயன் பாசனம் ஆகியவை மாசு ஏற்படும்.
அது மட்டுமின்றி கொடிவேரி அணையின் அருகில் சுமார் 12 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் இயங்குகின்றன. இதன் மூலமாக 40 லட்சம் பேர் வரை குடிநீர் ஆதாரம் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அதன் அருகில் ஆலை அமைவதை அனுமதித்தால் நீர் மாசு ஏற்படும் எனக் கூறி விவசாயிகளின் சார்பில் ஆலை அமைவதை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது.