ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை, கூட்டுக்குடிநீர் திட்டம், புதைகுழி மின்சாரப் பணி, கேபிள் பணி என நான்கு திட்டப் பணிகளுக்காக தனித்தனியாக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பாதி முடிவடைந்து நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள இவற்றின் பணிகள், அப்பகுதி மக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் தாங்கள் சந்தித்து வரும் சிரமங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே குடியிருப்பு மிகுந்த பெரியார் நகர்ப் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களின் பணிகளும் இன்னும் முடிவடையாத நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தங்களது மளிகைக் கடைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனத்தில் பெரியார் நகர் வழியாகச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு தோண்டப்பட்டிருந்த பள்ளம் காரணமாகவும் வாகனம் குழியில் விழுந்து விடாமல் இருப்பதற்காகவும் வாகனத்தை திருப்ப முயன்றபோது, சரக்கு வாகனம் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின்மேல் எதிர்பாராத விதமாக ஏறி சிக்கியது.