ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் குண்டம் மற்றும் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இத்திருவிழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆண்டு தோறும் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், தீக்குண்டம் இறங்கியும் தேர் இழுத்தும் தங்களது நேர்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபடுவார்கள். இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் முன்னதாக அறிவித்தது.
பாரியூர் கோயில் குண்டம் விழா ரத்து ஆணையை திரும்பப் பெறக் கோரி் ஆர்ப்பாட்டம் இந்த ரத்து அறிவிப்பைக் கண்டித்து, அகில பாரத இந்து மகா சபா கட்சியின் மாநிலத் தலைவர் சுபாஷ் சுவாமிநாதன் தலைமையில், கோயில் முன்பு அக்கட்சியினரும், பக்தர்களும் திரண்டு, திருவிழாவை வழக்கம்போல் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, கோயில் திருவிழாவை ரத்து செய்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். மேலும், கரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கோயிலுக்குள் குறைந்த அளவு பக்தர்களை அனுமதித்து, திருவிழா நடைபெற தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.