ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதுபோல் இந்தாண்டு திருவிழா கொண்டாடுவதற்கு அரசு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கோயில் நிர்வாகத்தினர், மக்கள் திருவிழா நடத்தாமல் விடக்கூடாது என அமைச்சர் செங்கோட்டையனிடம் முறையிட்டனர். அமைச்சரின் பேச்சுவார்த்தைக்கு இணங்கி பக்தர்கள் இல்லாமல் திருவிழாவை நடத்திக்கொள்ள இந்து அறநிலையத் துறை அனுமதியளித்தது.
அதனடிப்படையில், கடந்த மாதம் 24ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து இம்மாதம் 4ஆம் தேதி சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அதன் பின்னர் நேற்றிரவு (ஜன. 6) கொண்டம் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் குண்டத்திற்கு தீ மூட்டப்பட்டது.
இதனையடுத்து இன்று (ஜன. 7) அதிகாலை 3 மணிக்கு குண்டம் இறங்க தயார் நிலையில் இருந்தபோது அதிக மழை குறுக்கிட்டதால் குண்டம் திருவிழா பாதிக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் கவலையடைந்தனர். ஆனாலும் சாரல் மழையிலேயே, அம்மை அழைக்கப்பட்டு திருக்கோடி ஏற்றப்பட்டது. அதன் பின்னர் தலைமை பூசாரி ஆனந்தன் தீக்குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து முதலில் குண்டம் இறங்கி தொடங்கிவைத்தார்.
பக்தர்களின்றி நடைபெற்ற பாரியூர் குண்டம் திருவிழா! ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழாவிற்கு ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் வருகை புரிந்து தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்தாண்டு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு குண்டம் இறங்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கோயில் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க...சாலையோரம் நடந்து சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்: நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்