ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயி சென்னஞ்சா. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விவசாயி சென்னஞ்சா தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஸ் உடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது வனச்சரக அலுவலர் காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்க அகழி வெட்டுவதற்கு வனத்துறையிடம் நிதி இல்லாததால் நீங்கள் பணம் பத்து லட்சம் கொண்டு வாருங்கள் என பேசியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த விவசாயி செல்போனில் பேசும்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான ஆடியோவை சென்னஞ்சா வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்துள்ளார்.
வன அலுவலரும் விவசாயியும் பேசிய அந்த ஆடியோவில், "மாதத்திற்கு மூன்று தடவை யானை புகுந்தால் எங்க போவது? என்றகிறார். இதைக் கேட்ட வன அலுவலர் நீ எந்த ஊருப்பா? எனக் கேள்வி கேட்கிறார். தான் தாளவாடியை சேர்ந்தவர் என்றும், 2 மாதத்துக்கு முன்னாடி புகுந்த யானை தென்னை செடியை எல்லாம் சாப்பிட்டு போனதாக கூறுகிறார். அதற்கு நீ ஆபிஸ் வாப்பா என்றதும், அதெல்லாம் ஆபீஸ் வந்து ஏற்கனவே இது தொடர்பாக எழுதி கொடுத்து இருக்கிறோம் என்றார்.
அது குறித்து கேட்டதற்கு ஆறு மாதத்திற்கு முன்னாள் எழுதிப் போட்டவர்களுக்கே வரவில்லை; உங்களுக்கு எப்படி வரும்? என்பதாக பேசினார். இதைத்தொடர்ந்து பேசிய வன அலுவலர், தம்பி, காசு நீ என்ன என்னுடைய பாக்கெட்டிலா வைச்சுருக்க? என்றும், அரசு தான் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். இதனிடையே பேசிய விவசாயி, சார் நீங்க தான் ஏதாவது பண்ணனும்.. என்றதும், வன அலுவலர் இங்கப் பாரு நீ.. ஒரு ரூ.10 லட்சம் எடுத்துட்டு வா.. நாம் யானைக் குழி தோண்டலாம் என்கிறார்.
இதைக்கேட்ட விவசாயி, சார் மக்கள் எங்க சார் பணம் வைச்சுருக்காங்க? என்றதற்கு வன அலுவலர், சொல்வதை ஒரு நிமிடம் கேளு.. அரசிடம் இருந்து உங்களுக்காக, 12 லட்சம் செலவு செய்திருப்பதாகவும், அது இன்னும் அரசிடமிருந்து வரவில்லை என்றும் அந்தப் பணத்துக்கு ரூ.30 ஆயிரம் வட்டி கட்டி வருவதாகவும் கூறினார்.