ஈரோடு:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் நேற்று (அக்டோபர் 18) செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார். அதில், “பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற நகர்ப்புற அமைப்புகளுக்கான தேர்தல் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம்.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
ஆணவப் படுகொலை
மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 30ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடத்த உள்ளோம். மின் தட்டுப்பாடு என்ற இடர் ஏற்படுவதற்கு முன்னதாக மாநிலங்களுக்குத் தேவையான நிலக்கரியை வழங்க ஒன்றிய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் மிகக் கொடூரமான முறையில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சம்பவங்களில் தொடர்புடையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவப் படுகொலைகளைத் தடுத்த நிறுத்தும் வகையில் சட்டப்பேரவையில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்.
அதிமுக ஆட்சியின்போதே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. கொடநாடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயபாஸ்கர் வீட்டில் சுமார் ரூ.24 லட்சம் ரொக்கம், 4.8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி