ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி ஆப்பக்கூடல் ஒரிச்சேரி புன்னம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் சக்தி சர்க்கரை ஆலை கொதிகலனில் பயன்படுத்திய நிலக்கரி சாம்பல் பல ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டுள்ளது. இந்தச் சாம்பலின் அடிப்பகுதியில் கடும் வெப்பம், மேற்பகுதியில் வேலி கருவேல மரங்களும், புற்களும் உள்ளன.
நிலக்கரிச் சாம்பல் கொட்டப்பட்ட இடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் மக்கள், ஆடு மாடு மேய்க்கவும் அருகம்புல் பறிக்கவும் விறகு சேகரிக்கவும் நிலக்கரி சாம்பல் குவிக்கப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது சாம்பலில் கால் புதைந்து, கால்களின் மேல் உள்ள தோல் உரிந்து புண்ணாகி அழுகி, பல ஆண்டுகளாக வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது.
பாதங்கள், கால் விரல்கள், வெளுத்து எரிச்சலோடு நடக்க முடியாமலும், சிகிச்சை பெற முடியாமலும் ஆண்களும் பெண்களும் தவித்துவருகின்றனர். பலமுறை இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நிலக்கரி சாம்பல் கழிவால் பொசுங்கும் கால்கள் ஆலை சாம்பல்கள் ஒரு சில இடங்களில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அப்புறப்படுத்தப்படாத சுடு சாம்பலால் அப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்படைகின்றனர். இந்நிலையில், நிலங்களில் கிடக்கும் நிலக்கரி சாம்பலை அப்புறப்படுத்தவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் நிவாரண தொகை வழங்க வேண்டும் என அந்தியூர் வட்டாட்சியர் மாரிமுத்துவை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்குத் தடை: அவசரச் சட்டம் அரசிதழில் வெளியீடு