ஈரோடு:தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையான தாளவாடி குமிட்டாபுரத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சாணியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதாவது, தீபாவளி அடுத்த 3வது நாளில் இந்த திருவிழா நடைபெறும். இதில் மேல்சட்டை அணியாமல் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
தமிழகம், கர்நாடகத்தைச் சேர்ந்த பக்தர்கள் சாணத்தை ஒருவருக்கொருவர் மீது வீசி உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள். அதேபோல, இந்த ஆண்டுக்கான விழா நேற்று (நவ.15) துவங்கியது. இதையொட்டி கிராம மக்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக சாணத்தை ஓரிடத்தில் சேமித்து வைத்து, அதனை டிராக்டர் மூலம் பிரேஸ்வர் கோயிலுக்கு கொண்டு வந்து கொட்டினர்.
இதற்கிடையே, குமிட்டாபுரம் குட்டையில் இருந்து பீரேஸ்வரர் உற்சவர் கழுதை மீது ஏறி ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அங்கு கொட்டப்பட்ட சாணிக்குவியல் முன் ஊர் பெரியவர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், இளைஞர்கள் சாணத்தை உருண்டையாக்கி, ஒருவருக்கொருவர் மீது வீசியெறிந்து கொண்டாடினர்.
இந்த விநோத திருவிழாவில் பெண்கள் பங்கேற்று, பக்தர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினர். கிராம மக்கள் நோயின்றி வாழவும், மழை பொழிந்து விவசாயம் செழித்து கிராமம் வளம் பெறவும், வனவிலங்குகளில் இருந்து கால்நடை பாதுகாக்கவும், இந்த திருவிழா நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த விநோத விழா குறித்த தகவல்கள்:“சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, தன்னிடம் இருந்த சிவலிங்கத்தை சாணங்கள் கிடக்கும் குப்பை மேட்டில் எறிந்து விட்டார். இவ்வூரைச் சேர்ந்த மாட்டு வண்டி ஒன்று குப்பை மேட்டின் மீதேறிச் செல்லும்போது, ஒரு இடத்தில் ரத்தம் வழிந்துள்ளது.
உடனே இதைக் கண்ட மக்கள், அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் இருந்தது தெரிய வந்தது. அப்போது அவ்வூர் சிறுவனின் கனவில் வந்த சாமி, தீபாவளி முடிந்து மூன்றாவது நாள் சாணத்திலிருந்துதான் மீண்டெழுந்ததின் நினைவாக சாணியடி திருவிழா நடத்த வேண்டும் என கூறியதாகவும், இதையடுத்து மூதாதையர் வழிகாட்டுதல்படி, இந்த திருவிழாவை கொண்டாடி வருவதாகவும், அந்த சிவலிங்கமே பீரேஸ்வரர் எனவும் கோயில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்” இவை ஊர் மக்களால் கூறப்படும் செவிவழி தகவல் மட்டுமே.
இதையும் படிங்க: திருவண்ணாமலை தேரோடும் வீதியில் புதிய சாலை.. தரத்தை சோதிக்க வெள்ளோட்டம்!