ஈரோடு:சென்னையில் உள்ள காவல்துறை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலையில் மர்ம நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய அந்த மர்ம நபர் ஈரோடு ரயில் நிலையம் மற்றும் ஈரோடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இந்த நிகழ்வு குறித்து ஈரோடு எஸ்பி அலுவலகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு உஷாரான போலீசார் உடனடியாக இன்று காலை ஈரோடு ரயில் நிலையத்திற்கு சோதனையிட சென்றனர். மேலும் இது குறித்து ஈரோடு ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசாரும் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களுடன் கயல் என்ற மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. பின் ஈரோடு ரயில் நிலையம் நுழைவாயில் பகுதி முதல், ஒவ்வொரு பகுதியாக சல்லடை போட்டு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
அதைத்தொடர்ந்து பயணிகளின் உடைமைகளும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடைமேடையிலும், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ரயில் நிலையத்தில் உள்ள கடைகள், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், குப்பைத் தொட்டிகள், ரயில்வே பணிமனை பகுதி என ஒரு இடம் விடாமல் ஒவ்வொரு பகுதியாக தீவிரமாக சோதனை செய்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் சோதனை செய்த பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. அதே சமயத்தில் நகர காவல் நிலைய ஆய்வாளர் தெய்வராணி தலைமையில், போலீசார் ஈரோடு பேருந்து நிலையத்திலும் சோதனையில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்தில் உள்ள ஒவ்வொரு ரேக்குகளையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிக்கொண்டு சோதனை செய்தனர்.
மேலும் மோப்ப நாய் கயலும் வரவழைக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியாக சோதனை செய்தது. பேருந்து நிலையத்தின் அனைத்து நடைமேடைகள், கடைகள், தனித்தனியாக ஒவ்வொரு பேருந்துகள் என அனைத்து இடங்களிலும், சுமார் ஒரு மணி நேரமாக சோதனை நடந்தது. இதிலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. ஆகவே அந்த மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது. எனவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.