தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணை பவானிசாகர் அணையாகும். இந்த அணையில் இருந்து ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 2018ஆம் ஆண்டு அணை நீர்த்தேக்கப்பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பவானிசாகர் அணை முழுக் கொள்ளளவை எட்டியதோடு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
பவானிசாகர் நிரம்புமா? வழி மேல் விழிவைத்து காத்திருக்கும் விவசாயிகள் - water problem
பவானிசாகர்: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா என்ற சந்தேகத்தில் பாசனப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் கேரளாவில் பருவமழை தொடங்கினால், பவானி சாகர் அணயின் நீர்வரத்து அதிகரிக்கும். இந்நிலையில், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்துள்ளது. 2018 ஜூன் மாதம் இதேநாளில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74 அடியாகவும், நீர் இருப்பு 12.6 டிஎம்சியாகவும், நீர்வரத்து விநாடிக்கு இரண்டாயிரம் கனஅடியாகவும் இருந்தது.
ஆனால், இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55.43 அடியாகவும், நீர் இருப்பு 5.8 டிஎம்சியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 114 கனஅடியாகவும் இருந்தது. நீர்வரத்து குறைவாக உள்ளதால் இந்த ஆண்டு பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுமா என்ற சந்தேகத்தில் விவசாயிகள் கவலையுடன் தண்ணீருக்காக காத்திருக்கின்றனர்.