ஈரோட்டில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோயில்அருள்மிகு பண்ணாரியம்மன்.இக்கோயில் விழா மார்ச் 4ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி பல்வேறு கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழாவில் குண்டம் விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. நாளை அதிகாலை (மார்ச் 19) 4 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கடந்த சில தினங்களாகவே ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வருகைதருகின்றனர்.
இவர்களுக்கு நான்கு இடங்களில் நெகிழிபந்தல் அமைக்கப்பட்டு அங்கு பக்தர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், குண்டம் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது.
இவ்விழாவையொட்டி, வேம்பு, ஊஞ்சல் மரத்துண்டுகளை குண்டத்தில் அடுக்கிவைத்து தீக்குண்டம் வார்க்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக கனரக வாகனங்கள் பண்ணாரி வழியாகச் செல்ல இன்று (மார்ச் 18) முதல் நாளை மாலை மூன்று மணி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கனரக வாகனங்கள் சத்தி, ராஜன்நகர், ஆசனுார் ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும், பாதுகாப்புப் பணிக்காக எட்டு மாவட்டங்களிலிருந்து சுமார் ஆயிரத்து 500 காவல் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, ஒரே நேரத்தில் ஆண்கள், பெண்கள் குண்டம் இறங்குவதற்கான வசதிகளும், சாமி தரிசனம் செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நீண்ட நேரம் பந்தலில் காத்திருக்கும் பக்தர்களுக்காக நகரும் கழிப்பறை ஒன்றும், அனைத்து பக்தர்கள் குளித்துவிட்டு செல்லும் வகையிலும் தானியங்கி தண்ணீர் குழாய் ஒன்றும் புதிதாக அங்கு கொண்டுவரப்பட்டது. நாளை அதிகாலை நடைபெறும் குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
கர்நாடக மாநிலம் மைசூர், சாம்ராஜ்நகர்- தமிழ்நாட்டில் மதுரை, கோவை, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலிருந்தும் வேன், லாரி, கார், பேருந்து மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகைபுரிந்தனர்.
பக்தர்களின் வசதிக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், மைசூரில் இருந்தும், சத்தி, ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.