ஈரோடு: அத்திகடவு - அவினாசி திட்டப்பணிகள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சர் சு.முத்துசாமியும், மாவட்ட ஆட்சியரும் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “அத்திகடவு - அவினாசி திட்டப்பணிகள் வேகமாக நடைபெறுகிறது. சிக்கல் இருந்த இடங்களில் விவசாயிகளுடன் பேசிய பின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 106.8 கி.மீ. தூரம் மெயின் பைப் லைனும், 6 பம்மிங் ஸ்டேசன் பணிகளும் முழுமையாக முடிவுற்றுள்ளது. இத்திட்டத்தில் 1,045 குளங்களுக்கு நீர் நிரப்ப 958 கி.மீ பைப் லைன் அமைக்கும் பணி முடித்துவிட்டது. அதில் 600 குளங்களில் நீர் நிரப்ப தேவையான பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டது. மீதி 445 குளங்களில் நீர் நிரப்ப தேவையான பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிந்துவிடும்.
அவற்றில் சில குளங்கள் மட்டுமே காலதாமதம் ஆகும். இத்திட்டத்தில் மேலும் குளங்கள் சேர்க்க வாய்ப்பு இல்லை. அத்திகடவு - அவினாசி பணிகள் ஜனவரிக்குள் முடிவுற்ற பணிகளை வைத்து செயல்பாட்டிற்குள் கொண்டு வர பரிசீலனை செய்யபடும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அத்திகடவு - அவினாசி திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.