ஈரோடு:மழைக்காலங்களில் பவானி ஆற்றில் அதிகப்படியான நீர் உபரியாக வீணாவதைத் தடுக்கும் வகையிலும் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்கள் பயன்பெறும் நோக்கிலும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இத்திட்டம் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் அரசாணை வெளியிடப்பட்டு இதற்காக ரூ.1,652 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது.
முன்னாள் அமைச்சர் ஆய்வு
அதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வரப்பாளையம் பகுதியில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இந்தப் பணிகளை முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை உறுப்பினருமான செங்கோட்டையன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் இன்னும் நான்கு மாதங்களுக்குள் முடிக்கபட்டு ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படும். இதன் மூலம் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்" என்றார்.
இதையும் படிங்க:அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது: மாநகராட்சி