ஈரோடு : தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு பா.ஜ., சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது, "வரலாற்றை மறுசீராய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு, தமிழ்நாட்டின் வரலாற்றை மறைப்பதற்காக அல்ல. 1967 களில் குறிப்பிட்ட குடும்பத்தினரின் வரலாற்றை மட்டுமே வடித்து வைத்திருந்தனர். தமிழ்நாட்டிற்காக பாடுபட்ட எந்த தலைவரின் வரலாறும், பாடத்திட்டத்தில் இல்லை. தமிழக வரலாற்றில் தீரன் சின்னமலை, அவருடன் போராட்டத்தில் பங்கேற்ற குணாளன் நாடார், பொல்லான் என பல நுாறு பேர் இல்லை. இதனை வெளிக்கொண்டு வர வேண்டும்.
காவிரி ஆணையம் அனுமதி பெறாமல் அணை கட்ட முடியாது - அண்ணாமலை கீழடியில் கூட மறைக்கப்பட்ட உண்மைகளை, வெளிக்கொண்டு வரவே முயற்சி எடுக்கிறோம். கடவுள் இல்லை, கடவுள் மறுப்பு என்பனவற்றை, சில ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிலர் கூறுகின்றனர். அதற்கு முன்பே ஆதாரத்துடன் உள்ள சங்க இலக்கியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம் உள்ளிட்டவற்றை ஏன் ஏற்க மறுக்கின்றனர்? என விளக்க வேண்டும்.
தஞ்சையில் வரும், 5ஆம் தேதி உண்ணாவிரதம் இருப்பது கர்நாடகா அரசு, கர்நாடகா முதலமைச்சருக்கு எதிராக அல்ல. ‘மேகதாது அணை கட்ட தமிழகத்துக்கு ஏன் கடிதம் எழுதி தெரிவிக்க வேண்டும்,’ என கேட்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சித்தராமையா, சிவகுமாருக்கு எதிராக தான் போராட உள்ளேன்.
அம்மாநிலத்தில் விவசாயிகளை காக்க, அங்குள்ள பாஜக முயல்கிறது. தமிழக விவசாயிகளுக்காக நாங்கள் போராடுகிறோம். காவிரி ஆணையம் அனுமதி பெறாமல், அணை கட்ட முடியாது என்பதை உணர வேண்டும். இதை அரசியலாக்க வேண்டாம்" என அண்ணாமைலை கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க :'மோடி அரசு இருக்கும்வரை மேகதாதுவில் அணை கட்ட வாய்ப்பே இல்லை'