அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு ஈரோடு:மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை, பவானி ஆற்றில் நேற்று (நவ.23) 2 லட்சம் மீன் குஞ்சுகளை வளர்ப்புக்காக இருப்பு செய்வதை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, “தமிழகத்தில் தற்போது மீன் குஞ்சுகள் பெருக்கும் நடவடிக்கையில் மீன்வளத் துறை ஈடுபட்டுள்ளது. முன்னதாக மீன் குஞ்சுகள் வெளியே இருந்து வாங்கி வந்த காலம் மாறி, தற்போது தமிழகத்தில் மீன் குஞ்சுகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 40 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட உள்ளன.
அதன்படி, பவானிசாகர் அணையாற்றில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. இந்த மீன் குஞ்சுகள் 3 மாதத்தில் பெரியதாக வளர்ந்து, மீன்பிடிப்புக்கு ஏற்றதாக இருக்கும். இதனால், மீனவர்கள் வாழ்வாதாரம் உயரும். அணைப் பகுதியில், கூட்டுறவுச் சங்க மீனவர்கள் மீன் பிடிக்க குத்தகை முறைப்படி வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதன்படி, குத்தகை வழங்கும்போது முன்னுரிமை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் உள்ளது போன்று, வண்ண மீன் குஞ்சுகள் முகாம் அமைப்பது குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இறால் பண்ணை அமைத்து ஏற்றுமதி செய்யும் பணியையும் மீன்வளத்துறை செயல்படுத்த உள்ளது.
இதனையடுத்து, மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதிய மீன் வளம் குறித்த படிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்படும். மீன் வளத்துறை சார்பில், சத்தியமங்கலத்தில் மீன் நேரடி விற்பனை மையம் திறக்கப்படும். மீனவர்களின் பகுதிக்குச் சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து வருகிறோம். மேலும், மீன்குஞ்சுகள் வளர்ப்புக்குத் தேவையான தொட்டிகள் அதிகளவில் ஏற்படுத்தப்பட உள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க:95 வயது மூதாட்டியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட முதியோர் பென்ஷனை திருப்பி எடுத்த அரசு… காரணம் என்ன?