ஈரோடு மாவட்டம் திண்டல் காரப்பாறைப் பகுதியில் இடியும் நிலையில் இருக்கும் மண்சுவர் கொண்டு, தென்னங்கீற்றால் வேயப்பட்ட சிறிய குடிசை வீட்டில் வாழ்ந்துவருபவர்கள் ராசன் -கமலா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருந்தனர்.
கூலி தொழில் செய்யுமளவிற்கு உடம்பில் வலு இல்லை. மன உறுதி மட்டுமே இவர்களது வாழ்க்கையை கடந்துசெல்ல உறுதுணையாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய பசுமாடுகள்தான் இவர்களின் மூலதனமே.
பசுமாடுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தனது மகளது திருமணத்தை நடத்திமுடித்தனர். பிரசவத்திற்காக வந்த மகளை, கவனிக்க வசதியில்லாத காரணமாகவே நிறைமாத கர்ப்பிணியான அவர்களது மகள் உயிரிழந்தார். மகள் இறப்பு ஒருபக்கம், மனநிலை பாதிக்கப்பட்ட மகன் இன்னொரு பக்கம்! எந்தச் சோகத்தை தாங்குவார்கள்.
மனநிலை பாதிக்கப்பட்ட மகனும் உடல்நிலை மோசமான நிலையில் உயிரிழந்தது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ராசன் -கமலா தம்பதியினருக்கு இருந்த கடைசி ஆதரவும் அவர்களை விட்டுச்சென்றது பெரும் வேதனைதான்.
இவர்கள் படும் துயரம் கண்டு பலரும் உதவிசெய்ய முன்வந்துள்ளனர். இருப்பினும், ஓட்டை குடிசை வீட்டிற்குள்ளே முடங்கிப் போனது அந்த தம்பதியின் வாழ்க்கை. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், அவர்கள் ஆசையாய் வளர்த்த பசுமாடும் பால் கறக்கும் தன்மையை இழந்துவிட்டது.