ஈரோட்டில் தனியார் சிறுநீரக சிகிச்சை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் கிளை கரூரில் செயல்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதாமணி என்ற பெண் சிறுநீரக செயலிழப்பு காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். இவரது ரத்த உறவுகள் மூலம் இவருக்கு சிறுநீரகம் கிடைக்காததால், தமிழ்நாடு உடல் உறுப்பு தானம் மையத்தில் இவர் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் மதுரையில் விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த கருப்பையா என்பவர் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். அவரது உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் முன்வந்ததால் தமிழ்நாடு உடல் உறுப்பு கழகத்தில் பதிவு செய்திருந்த ஜெகதாமணிக்கு வரிசை அடிப்படையில் கருப்பையாவின் சிறுநீரகத்தை பொருத்த நேற்று முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு மதுரையில் இருந்து தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோட்டை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நவீன் என்பவர் மூலம் மதுரையில் இருந்து திண்டுக்கல், கரூர், கொடுமுடி வழியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மூன்று மணி நேரத்தில் கொண்டு வரப்பட்டது.
இதற்காக போக்குவரத்து காவல் துறையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடையூறு இல்லாமல் ஆம்புலன்ஸ் வருவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். ஈரோடு நகரின் உள்ளே ஆம்புலன்ஸ் வந்ததும் போக்குவரத்து ஆய்வாளர் தனது போக்குவரத்து வாகனத்தின் மூலம் ஒலிபெருக்கி மூலமாக போக்குவரத்தை சரிசெய்தபடி பாதுகாப்பு அளித்தார்.
மருத்துவர் சரவணன் செய்தியாளர் சந்திப்பு மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்த மருத்துவர்கள் உடனடியாக ஜெகதாமணிக்கு சிறுநீரகம் பொருத்தும் அறுவை சிகிச்சையை தொடங்கி உள்ளனர். சினிமா பட பாணியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சி அடைய வைத்தது.
மதுரையில் இருந்து வழக்கமாக ஈரோடு வர 6 முதல் 7 மணிவரை ஆகும். ஆனால் தன் உயிரை பணயம் வைத்து மூன்று மணிநேரத்தில் மிக துரிதமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நவீனுக்கு மருத்துவமனையை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:குழந்தையின் உயிரைக் காப்பாற்ற 30கி.மீ., தூரத்தை, 27 நிமிடங்களில் அடைந்த ஓட்டுநர்!