ஈரோடு:ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதியில் வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் எனப் பிரதான கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்னும் சில சிறிய கட்சிகள், சுயேட்சைகள் என 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆனால், ஈரோடு கிழக்கைப் பொறுத்தவரையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இடையே தான் நேரடி போட்டி எனத் தொகுதி மக்கள் கூறுகின்றனர். தேர்தலைப் பொறுத்தவரையில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் தபால் வாக்குகள் செலுத்தும் பணி தொடங்கியது. ஓரிரு நாளில் பூத் சிலிப் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யும் பணியைத் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.
இப்படித் தேர்தல் ஆணையத்தின் பணிகள் ஒருபுறம் இருக்க அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர். ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ள திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் 'கை' சின்னத்திற்கு ஆதரவாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரத்தில் 4 நாள் சுற்றுப்பயணமாக ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் திமுக அரசுக்கு எதிராக மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனை, தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார். அவருடன், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம், கருப்பணன், எஸ்.பி.வேலுமணி மற்றும் கூட்டணி கட்சிகளான பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கே.எஸ்.தென்னரசுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.