கர்நாடகா:தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையில் சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டல்பேட்டை அமைந்துள்ளது.
கர்நாடக - தமிழ்நாடு எல்லை என்பதால் தமிழர்கள் அதிகளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய புலி கோபாலபுரம் பகுதியில் புகுந்து அங்கிருந்த கால்நடை மற்றும் மனிதர்களைத் தாக்கியது. இதனால் கிராம மக்கள் வெளியே வரத் தயங்கினர்.
விவசாயப்பணிகள் முற்றிலும் முடங்கின. இதையடுத்து தமிழ்நாடு வனத்துறையினர் தாளவாடி சுற்றுவட்டாரத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு புலி நடமாட்டத்தைக் கண்காணித்தனர். இதையடுத்து மக்களை அச்சுறுத்தும் புலியைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கர்நாடக வனத்துறையினர் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இருந்து இரண்டு கும்கி யானைகளை வரவழைத்து புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். 8 மணி நேரப்போராட்டத்துக்குப்பின் புலிக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
இரு மாநில எல்லையில் மனிதர்களை தாக்கிய புலி பிடிபட்டது அதனைப்பரிசோதித்த மருத்துவர்கள், புலி நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்தனர். பின்னர் புலியைப் பத்திரமாக கூண்டில் ஏற்றி மைசூருக்கு அனுப்பி வைத்தனர். வயது முதிர்வின் காரணமாக வேட்டையாட முடியாத நிலையில் புலி ஊருக்குள் புகுந்து கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:முகமது ஜுபைருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்