சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குணா. பார்வையற்ற இவர் கலைவாணி என்கிற பார்வை குறைபாடுள்ள பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகாலட்சுமி(1) என்ற மகளும், தமிழழகன்(6) என்ற மகனும் உள்ளனர்.
குணாவும், கலைவாணியும் பொம்மைகளை விற்பனை செய்து, தங்களது வாழ்வை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கரோனா வைரஸ் நோய்ப் பாதிப்புக்கு முன்னதாக திருச்சிக்கு பணம் கொடுக்கச் சென்ற குணா, நோய்த்தடுப்பு நடவடிக்கை தீவிரம் காரணமாக, சேலத்திற்குத் திரும்ப முடியாமல் திருச்சியிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது.
இதனால், தனது குழந்தைகளுடன் ஈரோடு மாவட்டம், பவானி வந்த கலைவாணி தங்களுக்குத் தெரிந்த மாற்றுத்திறனாளியின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். ஆனால் நாட்கள் கடக்க உதவி நல்கிய மாற்றுத்திறனாளிக்கு தொந்தரவு கொடுக்க விருப்பமில்லாமல், பவானியிலிருந்து நேற்று தனது குழந்தைகளுடன் கிளம்பி சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் நடந்தே ஈரோடு வந்துள்ளார்.
ஈரோடு வந்த கலைவாணி மற்றும் அவரது குழந்தைகள், பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் பாதுகாப்பிற்கு இருந்த காவலர், கலைவாணி மற்றும் குழந்தைகளைப் பார்த்து பரிதாபப்பட்டு விசாரித்துள்ளார்.
அதில் தனது கணவர் திருச்சியில் மாட்டிக்கொண்டதாலும், பவானியில் அடைக்கலம் கொடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று எண்ணியதாலும் வீட்டிலிருந்து கிளம்பி வந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், பொம்மை வியாபாரம் நடத்தி பிழைப்பு நடத்தி வந்த தங்களுக்கு ஊரடங்கு உத்தரவு காரணமாக, வருவாயின்றித் தவித்து வருவதாகவும், ஆதரவு தேடி குழந்தைகளுடன் அலைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்ட காவலர் உயர் அலுவலருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, காவல் துறையினர், பொதுநல ஆர்வலர்கள் மற்றும் தனியார் அமைப்பினர் உதவியுடன் உடனடியாக அந்த குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டன.