திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 25 வயதிற்குட்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வாலிபால், கபடி, கால்பந்து, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், இப்போட்டிகளை திண்டுக்கல், தேனி மாவட்ட டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் தொடங்கிவைத்து, வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசினையும் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் அடுத்தக்கட்டமாக மாநில அளவிலான போட்டிகளுக்குத் தகுதிபெறுவார்கள். மாநிலளவில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.