திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, பச்சமலையன்கோட்டை ஊராட்சி அருகே சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து வரும் தண்ணீரை, மேல்நிலை குடிதண்ணீர் தொட்டியில் ஏற்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் அந்தக் குடிநீர் தொட்டி கடந்த சில மாதங்களாகச் சுத்தம் செய்யப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று (ஏப்.8) குடிதண்ணீரில் துர்நாற்றத்துடன் கருமை நிறத்தில் தண்ணீர் வந்துள்ளது. உடனே அப்பகுதியைச் சேர்ந்த கர்ணன் மேல்நிலைத் தொட்டியில் ஏறிப் பார்த்த போது, அங்கு புழு பூச்சிகளும், ஒரு காகமும் இறந்து மிதந்தது தெரியவந்தது.
தண்ணீர் தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற நிர்வாகம், யூனியன் அலுவலர்களுக்கு, சுகாதாரத்துறைக்கும் தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் புகார் தெரிவித்த கர்ணன் மேல்நிலைத் தொட்டியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் தகவலறிந்து ஊராட்சி மன்ற தலைவர், செயலர் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று அவரை கீழே இறங்க வேண்டும் எனக்கூறி வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் கர்ணன் உயர் அலுவலர்கள் வந்தால் தான் போராட்டத்தைக் கைவிடுவேன் என்று கூறியதால் அங்கு, பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸும் குடிநீர்த் தொட்டியைத் தானே சுத்தம் செய்து இன்று (ஏப்.8) மாலைக்குள் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்த பின்னர், கர்ணன் மேல்நிலைத் தொட்டியிலிருந்து கீழே இறங்கினார். அதன்பின்னர், குடிதண்ணீர் மேல்நிலைத் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்றது.