திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. அதில் பழனி மாவட்ட ஆட்சியர் உமா, வட்டாட்சியர் பழனிசாமி ஆகியோர் முகாமை தொடங்கிவைத்தனர்.
முகாமில் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு மனுக்கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, முகாமில் ஆயக்குடியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் குடிநீரில் புழுக்கள் வருவதாகக் கூறி பாட்டிலில் தண்ணீரை எடுத்துவந்து அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆயக்குடி பேரூராட்சி அலுவலர்கள் கூறுகையில், ஆயக்குடியில் விநியோகிக்கப்படும் குடிநீர் மிகவும் பாதுகாப்பானது, குடிக்க தகுதியானது என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்று அளித்துள்ளது.
இதனால் குடிநீரில் புழுக்கள் வராது. பொதுமக்கள் அச்சமின்றி குடிநீரை பயன்படுத்தலாம். குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க 50லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் பாட்டிலில் குடிநீருடன் வந்து வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.