கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக மார்ச் 24ஆம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணத் தொகையாக ரூ. 2000 வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
கரோனா நிவாரணத் தொகையை வழங்கக்கோரி தொழிலாளர்கள் போராட்டம்! - demanding corona relief
திண்டுக்கல்: கரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்துள்ள தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்கக்கோரி அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆனால், இதுவரை ஏராளமான தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை கிடைக்கவில்லை. இந்நிலையில், அரசு அறிவித்த நிவாரணத் தொகையை உரிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படாததை கண்டித்து, திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சார்பாக 150க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தொழிலாளர்கள் கூறுகையில், "ஊரடங்கு காலத்தில் வேலையின்றி தவித்து வரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்குவதாக அறிவித்தது. ஆனால், தற்போது வரை எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் எங்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் நீடிக்கிறது" என்று தெரிவித்தனர்.