திண்டுக்கல்: பழனி கோயிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (டிச.1) சாமி தரிசனம் செய்ய வந்தார். பழனி மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், புலிப்பாணி ஆதின ஆசிரமத்தில் நடைபெற்ற யாகத்தில் கலந்துகொண்டார். இந்த யாகம் நேற்று (நவ. 30) முதல் நடைபெற்று வருகிறது. நேற்று மாலையும் அவர் யாகத்தில் கலந்துகொண்டார்.
இந்த யாகத்தின்போது மத்திய இணை அமைச்சர், பாஜகவினர் சிலரை தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இது குறித்து ஈடிவி பாரத் செய்தியாளர் புலிப்பாணிஆதின நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, மகா சண்டியாகம் நடத்தப்படுகிறது எனவும் மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கவில்லை, யாகத்தில் பங்கேற்க மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
பழனி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அப்போது அவர்கள், பழனி அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆதின ஆசிரமத்திற்கு சென்று வழிபடுவது வழக்கம். இந்நிலையில், இங்கு திடீரென முன்னறிவிப்பின்றி நேற்று முதல் யாகம் நடத்தப்படுகிறது. அதில் மத்திய இணை அமைச்சர் ரகசியமாக பங்கேற்றது பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் பக்தர்களை அனுமதிக்காமல் முதலமைச்சரின் குடும்பத்தினர் யாகம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். தற்போது பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சரே புலிப்பாணி ஆதின ஆசிரமத்தில் ரகசிய யாகத்தில் கலந்து கொண்டது சரியா என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: கால்குலேட்டரை மிஞ்சும் சிறுவன் - மனித கம்ப்யூட்டர் பட்டம் வழங்கி கௌரவம்