திண்டுக்கல்: வத்தலகுண்டு மதுரை சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே சென்னையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் அறக்கட்டளை மூலம் மருத்துவமனை தொடங்கி உள்ளார். பின்னர் அந்த மருத்துவமனையை அருள் முதியோர் இல்லமாக நடத்தி வந்தாக கூறப்படுகிறது.
இதன் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு இல்லமும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வத்தலகுண்டில் உள்ள முதியோர் இல்லத்தைப் பாதுகாப்பதற்கு காவலாளி வேண்டுமென நாளிதழில் விளம்பரம் செய்ததையடுத்து காவலாளி வேலைக்காக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சேசுராஜா (வயது 40) என்பவரை கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி தேர்வு செய்து வேலைக்கு சேர்த்துள்ளார். இவர் தனது மனைவி பத்மாவுடன் முதியோர் இல்லத்தில் குடியமர்ந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செல்வராஜ் தனது மனைவி ஜாய் களஞ்சியத்துடன் வத்தலகுண்டு முதியோர் இல்லத்திற்கு வந்து உள்ளார். பின்னர் வேலைக்காக தலைமை அலுவலகம் இருக்கும் இடமான சென்னைக்கு சென்று உள்ளார். அப்போது மனைவியை வத்தலகுண்டுவில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்க வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி முதியோர் இல்லத்தில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தபோது, ஜாய் களஞ்சியம் படுக்கை அறையில் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஜாய் களஞ்சியத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன்பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி ஜாய் களஞ்சியம் உயிரிழந்தார். இதுகுறித்து வத்தலகுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.