பொதுவாக நூலகத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை நமக்கு கொடுக்கக் கூடியவையாகும். பல்வேறு வகைகளில் நூல்கள் நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. இவ்வாறான நூல்கள் பலரது வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளது. இதுபோன்ற அனுபவங்கள் திருநங்கைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் திருநங்கைகளுக்கான பொது நூலகம் திண்டுக்கல்லில் திறக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள என்.ஜி.ஓ காலனியில் ‘தாய் கூடு’ என்ற அமைப்பின் சார்பாக அதன் நிறுவனர் குணவதி இந்த நூலகத்தைத் தொடங்கியுள்ளார். இதனை திண்டுக்கல் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி தொடங்கிவைத்தார். இந்த நூலகத்தில் திருநங்கைகள், மூன்றாம் பாலினத்தவர்கள் படும் இன்னல்கள், சமூக சீர்திருத்தவாதிகள், தலைவர்கள் உள்ளிட்டோரின் புத்தகங்கள் உள்ளன.
இதுகுறித்து பாலபாரதி கூறுகையில், “இந்த நூலகம் இந்தியாவிலேயே முதல் முறையாக திருநங்கைகளுக்காக அவர்களின் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது. ஏனெனில் திருநங்கைகள் பொது நூலகத்தை பயன்படுத்தும்போது மற்றவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகும் நிலை இன்றும் இச்சமூகத்தில் உள்ளது. ஆனால் இந்த நூலகத்தின் மூலம் அவர்களுக்கான தேடலை இங்கே கண்டடையலாம். இதுபோன்ற நூலகங்கள் வளர்வதற்கு தமிழ்நாடு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்” என்று கூறினார்.
திண்டுக்கல் சிறப்பு நூலகம் இதுகுறித்து திருநங்கையும், நூலகத்தின் நிறுவனருமான குணவதி கூறுகையில், “இந்த நூலகம் திருநங்கைகள் யாரும் தங்களது வாழ்வை தன்னம்பிக்கை இன்றி தற்கொலையில் முடித்துக்கொள்ளக்கூடாது என்ற நோக்கத்தில்தான் தொடங்கப்பட்டது. பொதுவாக சமூகம் மற்றும் குடும்பத்தினரால் ஒதுக்கப்படும் திருநங்கைகள் பலர் காதல் என்ற பெயரில் ஏமாற்றப்படுகிறார்கள். ஆதலால்தான் காதலர் தினத்தன்று இந்த நூலகத்தைத் தொடங்கியுள்ளோம்.
எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்தாலும் எங்களை அடைமொழிகளை வைத்து தகாத முறையில் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்து மனதளவிலும் உடலளவிலும் காயப்படுத்துகின்றனர். இதிலிருந்து மீள்வதற்கு திருநங்கைகள் தங்களது திறமைகளை வெளிக்கொணர வேண்டும். திருநங்கைகள் ஃபீனிக்ஸ் பறவைபோல் மீண்டெழ வேண்டும். இந்த நூலகம் இளம் திருநங்கைகளுக்கும் அடுத்தத் தலைமுறைக்கும் நிச்சயம் பயனுள்ள நூலகமாக இருக்கும்” என்றார்.