'ஊட்டி' மலைகளின் 'அரசி' என்றால், 'கொடைக்கானல்' மலைகளின் 'இளவரசி'. திண்டுக்கல் மாவட்டத்தில் அமையப் பெற்றது. எங்கும் மலைகளும் காடுகளும் பார்ப்போரை மனம் சிலிர்க்க வைக்கும். கோடைவாசஸ்தலமான கொடைக்கானல், மேற்குத்தொடர்ச்சி மலையில் 7,000 அடி உயரத்தில் உள்ளது. இங்கே நடைபயணம், படகு சவாரி, குதிரை சவாரி மற்றும் மிதிவண்டிப் பயணம் போன்ற பலதரப்பட்ட தீரச்செயல் மிக்க விளையாட்டுக்களை விளையாடி மகிழலாம். ஆண்டு முழுவதும் கொடைக்கானலில் தட்ப வெப்பநிலை இனிமையாக இருப்பதால், பச்சை பசுமையாய் காட்சி அளிப்பதால் கொடைக்கானல் சென்று மகிழலாம்.
இதனால் கொடைக்கானலில் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துவருகிறது. இங்கு பயணிகள் சிலர் அரசுப் பேருந்துகளிலும் தனியார் வாடகை வாகனங்களிலும் வந்து செல்கின்றனர். கொடைக்கானலுக்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காகவும் உள்ளூர் பயணிகளின் போக்குவரத்திற்காகவும் அரசு சார்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. பேருந்து நிலையம் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. பேருந்து நிலையம் அமைக்க சுமார் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பேருந்து நிலையத்தை அப்போதைய துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற ஒரே பேருந்து நிலையமாக கொடைக்கானல் பேருந்து நிலையம் இருந்தது. பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்த மூன்று ஆண்டுகளில் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளிலும் முன்னுதாரணமாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் இந்த பேருந்து நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், தொற்று நோய்ப் பரப்பும் இடமாகவும் மாறியுள்ளது என இங்குள்ள மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கொடைக்கானலில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் முதல் பொதுமக்கள் வரை, சீசன் நேரங்களில் நாள் ஒன்றுக்கு 1000 பயணிகளும்; சாதாரண நாட்களில் 500க்கும் மேற்பட்ட பயணிகளும் பயணம் செய்வர். வணிக நோக்கில் கட்டப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இந்தக் கடைகளில் சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு, மற்ற கடைகள் அனைத்தும் கட்டிய நாள் முதல் தற்போது வரை மூடியே உள்ள நிலையில் இருந்து வருகிறது.