தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொடைக்கானல். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கையும், எழிலும் தான் அடையாளமாகத் தோன்றும். ஆனால் கொடைக்கானல் இயற்கை, செழுமை மட்டுமின்றி வரலாற்றிலும், கலாசாரத்திலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்குகிறது.
இதை உறுதி செய்யும் வகையில் பூம்பாறை கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து கல் திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொடைக்கானலில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூம்பாறை கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் மன்னன் காலத்து திசைகாட்டும் கட்டடங்கள், தலைவாசல்கள், கல் திட்டைகள் போன்றவை கண்டுடெடுக்கப்பட்டுள்ளன.
பெண் ஒருவர் புலியைத் தாக்கும் கல்வெட்டு குறிப்பாக அதில் பெண் ஒருவர் புலியைத் தாக்கும் கல்வெட்டும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் பண்டையகால பெண்கள் இவ்வாறான போர் குணத்துடன் கூடிய வீரமிகு பெண்களாய் இருந்திருப்பது உறுதியாகிறது. இதுகுறித்து தொல்பொருள் ஆய்வாளர் காந்திராஜன் கூறுகையில், ’கொடைக்கானல் பகுதியைச் சுற்றியுள்ள அடுக்கம், தாண்டிக்குடி, பூம்பாறை உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், கிடைத்த கல் திட்டைகள் ஆய்வு செய்ததில் இவையனைத்தும் 3000ம் ஆண்டு தொன்மையானது என்பது தெரிகிறது. இதையடுத்து, பாண்டிய மன்னன் காலத்தில் மதுரை - சேர நாடான கேரளாவிற்கு இடையேயான வணிகப் பரிமாற்றம் மலைப்பாதையின் வழியாகவே நடைபெற்றுள்ளது. அவ்வாறான பரிமாற்றத்தின்போது சோழ மன்னர்களால் இந்த மண்டபங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன.
ஆனால் அதன்பின்னர் பராமரிப்பின்றி சிதிலமடைந்த மண்டபத்தின் கற்களை இங்குள்ள மக்கள் தங்கள் வீட்டுப் பயன்பாட்டிற்காக எடுத்துச் சென்றுள்ளனர். அது தற்போது ஆங்காங்கே தெருக்களிலும், தலைவாசல்களிலும் எஞ்சி இருக்கிறது. எனவே இது குறித்து முறையாக ஆய்வு செய்தால் நிச்சயமாக கீழடி போன்று, தமிழர்களின் மற்றொரு பழமையான வரலாற்று நாகரிகத்தை உலகிற்குத் தெரியப்படுத்தலாம் என்று கூறினார்.
மறைந்து கிடக்கும் தமிழர்களின் வரலாறு மேலும் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த வரலாற்றுச் சின்னங்களை அரசு பாதுகாத்திட வேண்டும் என்றும்; இதுகுறித்து முறையான அகழாய்வு நடத்தி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் பூம்பாறை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:அலைமோதும் பார்வையாளர்கள்; காவல் துறை கட்டுப்பாட்டில் கீழடி...!