ஒரே தேதியில் தாத்தா, மகள், பேரன் பிறந்தநாள் - குடும்பத்துடன் கேக் வெட்டி மகிழ்வுப்பகிரல்! திண்டுக்கல்:உலகில் மனித இன பிறப்புகளில், பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்கள், ஆறு விரல் கொண்டவர்கள் என அதியசப் பிறப்புகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு தலைமுறையைச் சேர்ந்த குடும்பத்தில் தந்தை, மகள், பேரன் என மூன்று பேரும் ஒரே தேதியில் பிறந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டைச் சேர்ந்தவர், வடிவேல். இவர் ஆட்டோ கன்சல்டிங் வைத்து நடத்தி வருகிறார். இவர் 1971ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி பிறந்தார். இவருக்கு திருமணம் முடிந்து 1996ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி ஜனனி என்ற மகள் பிறந்தார். இவர் பிறந்த தேதியிலேயே தனது மகள் பிறந்திருக்கிறாள் என குடும்பமே மகிழ்ச்சியில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் தனது மகள் ஜனனியை திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகேஷ் கண்ணன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளார். அவர்கள் இருவருக்கும் 2020ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி, சாய் யுகன் நாகேஷ் என்ற மகன் பிறந்துள்ளார். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த அந்த குடும்பத்தினர் தாத்தா, மகள், பேரன் ஆகியோர் 3 பேரின் பிறந்தநாளும் ஒரே நாளில் வருவதைக் கண்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
நேற்று (ஜூலை 29) மூன்று பேரும் கேக் வெட்டியும், முதியோர் இல்லத்திற்குச் சென்று உணவு வழங்கியும், தங்கள் பிறந்த நாளை கொண்டாடினர். ஒரே தேதியில் பிறந்த இவர்களின் பிறந்தநாள் நிகழ்வை உறவினர்களும், நண்பர்களும் ஆச்சரியத்துடன் கேட்டறிந்து வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.
இதையும் படிங்க:மும்பை சாப்ரா ஹவுஸில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!