திண்டுக்கல்:பழனியில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று(அக்.14.) மதியம் நவபாஷாண சிலை பாதுகாப்பு குழுவின் கூட்டம் திருக்கோவில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர் உச்சிகால பூஜையில் தரிசனம் செய்தற்காக குழுவினர் மலைக்கு சென்றனர்.
இவர்கள் மலைக்கோவிலுக்கு ரோப்காரில் சென்ற அடுத்த 20வது நிமிடத்தில் பக்தர்கள் வந்த ரோப்கார் பாறை மீது மோதி நடுவழியில் நின்றது. இதனையடுத்து பெட்டிகளில் சிறிய சேதம் ஏற்பட்டது ,இதனால் யாருக்கும் காயம் இல்லை என அதிகாரிகள் கூறினர். சிறிது நேரத்திற்குப் பின்னர் ரோப்கார் சேவை வழக்கம் போல இயங்கியது.
பழனி மலைக் கோவிலுக்குச் செல்லும் ரோப்கார் பாறை மீது மோதியதால் பரபரப்பு! பழனி ரோப்கார் சேவையில் சில நாட்களுக்கு முன் தான் பழைய பெட்டிகள் நீக்கபட்டு புதிய பெட்டிகள் பொருத்தபட்டுள்ளன. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ,படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த ரோப்கார் சேவை மாதத்திற்கு ஒருநாளும் வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ரோப்கார் சேவை காலை 7 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை செயல்படுகிறது. ஒரு பெட்டிக்கு நான்கு பேர் விதம் நான்கு பெட்டிகளில் 16 பேர் பயணம் செய்யலாம்.