திண்டுக்கல்: சமீபகாலமாக தமிழ்நாடு உள்பட நாட்டின் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, அதனால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 30-க்கும் அதிகமானோர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரம் பலரின் தற்கொலைக்கு காரணமாகும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அனுப்பிய மசோதா, சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனால் ஆளுநருக்கு எதிராக கடும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. இதற்கு தொழில் நுட்ப வல்லுநர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பாரத் ஓஎஸ் நிறுவனரும், தொழில்நுட்ப வல்லுநருமான கார்த்திக் அய்யர் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “ஆன்லைன் ரம்மி நிறுவனங்களில் சூடோ ரேண்டம் ஜெனரேட்டர் என்னும் தொழில்நுட்பம் அனைவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இந்த சூடோ ரேண்டம் ஜெனரேட்டர் என்னும் தொழில் நுட்பம் திறமை உள்ளவர்களையும், திறமை இல்லாதவர்களையும் வெற்றி பெறச் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சூடோ ரேண்டம் ஜெனரேட்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் திறமைக்கு வாய்ப்பு கிடையாது. இதில் திறமை உள்ளவர்களும், திறமை இல்லாதவர்களும் விளையாடினால் அனைவருக்கும் ஒரே வாய்ப்பு மட்டுமே கிடைக்கும்.