திண்டுக்கல்:பழனியில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று (அக்.19) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு தமிழகத்தில் கள் தடை நீக்க அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையேல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தோற்கடிக்கப்படுவார்கள்” என்றார்.
மேலும், “ தமிழக அரசியல்வாதிகளுக்கு கள் பற்றிய புரிதல் இல்லை. அண்டை மாநிலங்களில் கள் தடை இல்லாதபோது, தமிழகத்தில் மட்டும் ஏன் உள்ளது? கலப்படத்தை கட்டுப்படுத்த தடை என்றால், இது ஆளுமை இல்லாத அரசா? தமிழகத்தில் கள் இறக்க அனுமதி, கள்ளுக்கு கடை என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறுகிறார்.
ஆனால், தமிழகத்தில் கள்ளுக்கு தடையும், கடையும் கூடாது என்பது எங்களின் நிலைப்பாடு. இது குறித்து அவரிடம் பேச பலமுறை முயற்சி செய்தும், அவரை சந்திக்க முடியவில்லை. குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்ட பிரதமர் மோடி, எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் திருக்குறள் கூறி வருகிறார்.
ஆனால், தமிழக பாஜகவினர் ஏன் திருக்குறளைக் கூற மறுக்கின்றனர்? அப்படி என்றால் அவரை முன்னிலைப்படுத்தி மட்டும் வருகின்றனர். கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி நீலகிரி மாவட்டம் தவிர, தமிழகம் முழுவதும் நடத்த உள்ளோம்.